Terrorists killed: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்ட வனப்பகுதியில் பல மணிநேரம் நீடித்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையறிந்த பயங்கரவாதிகள் இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றி வந்தனர். ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக இரவு பகலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் இறுதியில், பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நெருங்கினர். தப்ப முயன்ற பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த சண்டையில், பயங்கரவாதி ஒருவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் இரு பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தொடர் தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, உதம்பூர் மாவட்டத்தில் பசந்த்நகர் மற்றும் ராம்நகர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.