மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு நவராத்திரியின் போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது..
7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இந்த மாதமே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக நவராத்திரியின் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சாத்தியமான தேதி குறித்து அரசாங்கம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI) புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.