காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக உடற்கல்வி ஆசிரியருடன் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகளும் நீரில் பரிதபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 மாணவிகளின் உடல்களையும் மீட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, தலைமை ஆசிரியர் பொட்டுமணி விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவர் உத்தரவிட்டுள்ளார்.