கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார். அதன்படி, ரூ.6.45 கோடியில் 50% மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.
கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். தீவன விரயத்தைக் குறைப்பதற்காக, மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் வழங்கப்படும். ரூ.5 லட்சம் செல்லப் பிராணிகளுக்கு 50% மானியத்தில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும்.
ரூ.25 கோடியில் கால்நடை மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவியர் விடுதிக் கட்டடம் கட்டப்படும். ரூ.5 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்கிட 40% மானியம் வழங்கப்படும். ரூ.52 கோடியில், கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு & பள்ளம்துறை மீன் இறங்குதளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.