கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4-வது அலையாக கருத முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசின் நிலைபாட்டை அறிய விரும்புவதாக கூறிய இபிஎஸ், தேவையான மருந்துகள் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவற்றில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.. மேலும் வீடு வீடாக சென்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்..
இபிஎஸ் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி இருப்பு, மருந்துகளின் கையிருப்பு, அவசர் ஊர்தி வசதிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்..
கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முக்கவசத்தை மருத்துவமனைகளில் கட்டாயமாக்கி உள்ளோம்.. தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டி உள்ளது.. கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.. தற்போதைய கொரோனா பாதிப்பு ஒமிக்ரானின் XBB.16 மாறுபாடு காரணமாக அதிகரித்துள்ளது.. எனினும் இது உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை.. தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல் என்ற மிதமான பாதிப்பாக உள்ளது..
எனவே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி தேவை என்ற நிலையிலோ அல்லது அதிதீவிர சிகிச்சை என்ற நிலையிலே யாரும் வரவில்லை.. கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.. ஒரே நேரத்தில் 100, 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் கிளஸ்டர் பாதிப்பு தற்போது இல்லை.. கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4-வது அலையாக கருத முடியாது.. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.. எனவே தற்போது கொரோனாவால் பெரிய அளவில் பதற்றம் இல்லை… எனினும் இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. கொரோனா எப்படி உருமாறி வந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை காப்பார்…” என்று தெரிவித்தார்..