தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், நிரந்தர பட்டாசுக்கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் உரிமம் வழங்க வேண்டும். நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை புதுப்பிக்க எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். பட்டாசுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்” என்பது போன்ற 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.