சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றியப் பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும், அதேபோல் மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
உயர் தெளிவுத்திறன் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் உதவியுடன், பன்முகத் தொழில்நுட்பங்கள் வாயிலாக உயர் தெளிவுத்திறன் பெருவிகித அளவிலான மாநிலத்துக்காக உருவாக்கப்படும். இதன்மூலம் நில அளவை, பேரிடர் மேலாண்மை, திட்டமிடல் மற்றும் இதர உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த வரைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் கூடம், இணைய வசதி, படிப்பகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான ஓய்வறைகள், மின்னணு நுழைவு அட்டை மற்றும் பரந்த வாகன நிறுத்துமிடம் ஆகிய அனைத்து வசதிகளையும் கொண்டு சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் நவீனப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.