தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று பொன்னேரிக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து புறப்பட்டு பொன்னேரி வந்த முதல்வரை ஆவடி நாசர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். பொன்னேரியில் இருந்து விழா நடக்கும் ஆண்டாள் குப்பம் வரையிலும் இரு மருங்கிலும் மக்கள் திரண்டு நின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவள்ளூர் மாவட்டத்தில் 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறேன். ஒரே நிகழ்ச்சியில் அதிக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில்தான். திருவள்ளூரை சுற்றி தற்போது உள்ள தொழில் வளர்ச்சிக்கு கலைஞர் தான் காரணம். கார் உற்பத்தியில் தொடங்கி, கண்ணாடி உற்பத்தி ஆலை வரை கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது” என்றார். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவிப்புகள் பின்வருமாறு..
* கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
* காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளத்தை மேம்படுத்த ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* திருமழிசை- ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்.
* வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.