யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 24ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டி, சிலர் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, சிலவற்றை சூறையாடியதாக கூறப்படுகிறது. மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த அந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். தாக்குதலின்போது சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் இருந்ததாகவும், அவரை மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து யூடியூபர் சவுக்கு சங்கரின் பதிவில், “இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்தச் சம்பவத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சவுக்கு சங்கர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை தொடங்கினர். ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையரைப் பற்றி சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு எழுப்பியிருந்ததால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யாரல்லாம் எனபது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Read More: காட்டிக் கொடுத்த ஷூ..!! கொள்ளையர்கள் சிக்கியது எப்படி..?