சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கபடுகின்றனர்.
இதன் விளைவாக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு கூட அச்சம் கொள்கின்றனர். பல போராட்டங்களுக்கு பிறகு, பெண்கள் படிக்க சென்ற நிலையில், மீண்டும் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் கூட தற்போது பல பெண்களுக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகே உள்ள ஏந்தலூர் கிராமத்தில், 19 வயதான செல்வம் என்ற நபர் வசித்து வருகிறார். தனியார் கல்லூரி ஒன்றில், இவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 5 வயது சிறுமி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அவரை மிரட்டியுள்ளார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கைது செய்துள்ளனர்.