திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதியன்று தமிழகத்தின் மொத்த மின்நிறுவு திறன் 32,595 மெகாவாட் என்பது தற்போது 39,770 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் அதிகபட்ச மின்நுகர்வு 2024-25-ல் 20,830 மெகாவாட்டாக உள்ளது. அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும், தூத்துக்குடி மாவட்டத்தில் 600 மெகாவாட் திறன் உடைய அனல்மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.57 கோடியில் மன்னார்குடி, சிதம்பரம், திருவிடந்தை, திருஉத்திரக்கோசமங்கை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செல்லும் மேல்நிலை மின்பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும். மேலும் ரூ.1,192 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கிலோவோல்ட் துணைமின் நிலையங்கள் நிறுவப்படும் என்றார்.