தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பாஜகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக #Article356 என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி இருந்தது. இதற்கிடையே, நேற்று வெளியான வாரிசு திரைப்படத்தில் 5 நிமிடத்தில் ஆட்சி மாறும் பேசியிருப்பார். தற்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி ட்விட்டரில் #5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாஜகவினரும் வலதுசாரி ஆதரவாளர்களும் இந்த ஹேஷ்டேக்கை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சட்டசபையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.