நம்மில் அதிகப்படியானோர் எடையை குறைக்கிறேன் பேர்வழி காலை உணவை குறைவாக சாப்பிடுவது அல்லது முற்றிலுமாக தவிர்த்து விடுவது போன்ற பழக்கங்களை கொண்டிருக்கிறனர். இந்த பழக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. நமது உடலுக்கு காலை உணவு மிக மிக அவசியமான ஒன்றாகும். இந்த காலை உணவை நாம் தவிர்ப்பதால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி இல்லாமல் சோர்வாக காணப்படுவோம். மேலும் சிலர் காலை நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்ற யோசனை இல்லாமல் எதையாவது சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வார்கள். எந்த உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொய்யாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட இனிப்பான பழங்கள் காலை நேரத்தில் சாப்பிட சிறந்த உணவு. வேக வைத்த உணவுகளை சாப்பிடும்போது காலை நேரத்தில் வயிற்றுக்கு இதமாக இருக்கும். உதாரணத்திற்கு இட்லி, கொழுக்கட்டை, இடியாப்பம் மற்றும் புட்டு உள்ளிட்ட உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. சிகப்பு அரிசியில் செய்யப்பட்ட அவல் உப்புமா, அவல் உருண்டை போன்றவற்றை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் திணையில் உப்புமா மற்றும் பொங்கல் செய்து சாப்பிடுவது கண்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதுடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக உள்ள கேழ்வரகில் கூழ் மற்றும் கஞ்சி செய்து சாப்பிடுவது காலை நேரத்திற்கு ஒரு சிறப்பான உணவாகும். கேழ்வரகு போலவே கம்பும் சாப்பிடலாம். அதேபோல சோளத்தில் கொழுப்பு, மாவு சத்து, கால்சியம், புரதச்சத்து, இரும்பு சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. இதையும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். குதிரைவாலியில் பாஸ்பரஸ், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மாவு சத்து, இரும்பு சத்து உள்ளிட்டவை இருக்கின்றது. சிறுதானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசிலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.இதில் உப்புமா மற்றும் பொங்கல் அல்லது கஞ்சி செய்து காலை உணவாக சாப்பிடலாம்.