60 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய கலைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
60 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ரூ.72,000-த்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உடைய கலைஞர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, “வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்” என்ற பெயரிலான ஒரு திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக மாதம் ரூ.6,000/- நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
துடிப்புடன் பணியாற்றிய காலத்தில், கலை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கி கொண்டிருந்தாலும், வயது முதிர்ச்சி காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள, வயது முதிர்ந்த கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களது சமூக- பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2023- 24 நிதி ஆண்டில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.46.96 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எல்ஐசி வாயிலாக 2022-23 முதல் நிதியுதவி பெறும் பயனாளிகளின் மாநில வாரியான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. இந்த தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.