ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கோவிலை சுத்தம் செய்ய வரவில்லை.
இதனால் கோவிலின் காவலாளியான தேவரகொண்டா ரத்னம், தனது மகள் பல்லப்பு வீரம்மாவிடம் மூதாட்டி கோவிலை சுத்தம் செய்ய வரவில்லை என தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவலாளியின் மகள் பல்லப்பு வீரம்மா மூதாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மூதாட்டி கழுத்தில் கத்திக்குத்து காயங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தக் கறைகளுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த பல்லப்பு வீரம்மா, பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், மஞ்சு மற்றும் சம்பா ஆகியோர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மஞ்சு மற்றும் சம்பாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மஞ்சுவும் சம்பாவும் தனியாக வசிக்கும் வயதான பெண்களை குறிவைத்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்வதை ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளியான மஞ்சுவிற்கு திருமணமாகாத நிலையில், சம்பாவின் மனைவி அவர் செய்த குற்றங்கள் குறித்து அறிந்து அவரை விட்டுச் சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த மஞ்சு சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வயதான மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: