பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி விவசாயி இவரது மனைவி சுபித்ரா. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தையின் பெயர் கௌஷிக் வயது ஒன்று. கோபியும் அவரது மனைவியும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் போது தங்களது ஒரு வயது குழந்தையையும் விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குழந்தையை அங்கே உட்கார வைத்துவிட்டு கோபியும் அவரது மனைவியும் வேலை பார்க்கச் சென்றுள்ளனர். அந்த வயல்வெளி பகுதியில் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. அதில் முழுவதுமாக நீர் தேக்கி வைத்து விவசாய நிலங்களுக்கு பாய்ச்சி வந்திருக்கின்றனர். அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கௌஷிக் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இருக்கிறான். வேலை முடித்து வந்து பார்த்த பெற்றோர் குழந்தையை காணவில்லை என அதிர்ச்சியடைந்து தேடிய போது தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இருக்கிறான் கௌஷிக். உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.