உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கழிவு நீர் வடிக்காலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் எட்டு பகுதியில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய பணியில் இருந்த போது அங்குள்ள கழிவுநீர் வடிகாலில் இறந்த பெண்ணின் சடலம் வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டப்பட்ட அந்தப் பெண்ணின் கைகளில் ஹோலி வண்ணங்கள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த உடலின் சிதைந்த நிலையை வைத்து பார்க்கும் போது அந்தப் பெண் இறந்த ஐந்து நாட்கள் இருக்கலாம் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து நொய்டா செக்டார் எட்டு பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இது பற்றி பேசிய அப்பகுதி மக்கள் காவல்துறை அப்பெண்ணின் உடல் மற்றும் தனியாக வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் கைகள் ஆகியவற்றையும் கழிவுநீர் கால்வாயில் இருந்து எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். காவல்துறையின் சார்பாக மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை ஆய்வு செய்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.