தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் அக்டோபர் 27-ஆம் தேதி கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டு குறித்த முக்கிய முடிவுகளும், முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் அக்டோபர் 27–ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்ந வாரம் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.