தனியார் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மற்றும் வார்டு கவுன்சிலருக்கு தகவல் சொல்லவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட திமுக பிரமுகர்.
சென்னை தினத்தை ஒட்டி, சென்னையின் பெருமைகளை ஓவியமாக வரைந்து அதனை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் தனியார் அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி குறித்து அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவில்லையாம். பொதுவாக அரசு நடத்தும் நிகழ்ச்சி மட்டும் தான் எம்.எல்.ஏ.வுக்கும், கவுன்சிலர் போன்றோருக்கு தகவல் சொல்வது வழக்கம்.
ஆனால், அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் சொல்லவில்லை என்று திமுக பிரமுகர் ஜெய்சங்கர் விரக்தியில் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்துள்ளார். அப்போது இந்த தனியார் அமைப்பு நடத்தும் கண்காட்சியை திறந்து வைக்க வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். ஏற்கனவே விரக்தியில் இருந்த திமுக பிரமுகர் ஜெய்சங்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கடுமையாக நடந்து கொண்டது மட்டுமில்லாமல் அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மேலும் மக்கள் முன் அவரை அசிங்கப்படுத்தும் நோக்கிலேயே கேள்விகளை கேட்டார்.
ஒரு கட்டத்தில் திமுக பிரமுகர் ஜெய்சங்கர், “ஸ்டால் போட 2,000 பணம் வாங்குகிறார்களே” என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி கேட்க, அவர் “என்னிடம் நீங்க பணம் வாங்கிக் கொள்ளுங்க, அவர்களிடம் கேட்காதீங்க” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டத் தயாரானார்.
ஆனால் அவரை விடாமல் துரத்தி கேள்வி கேட்டார் திமுக பிருமகர், ஒரு கட்டத்தில் கடுப்பான மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் “நீங்க எங்கெங்க வசூல் பண்ணுறீங்கன்னு டிவி லைவ்வில் சொல்லி விடுவேன்” என எச்சரித்து திமுகவினரை அதிர வைத்தார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவரிடம் திமுக பிரமுகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.