கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், ‘அரசு செயல் திறன்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். மஸ்க் தலைமையில்னான இந்த புதிய துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்
அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இதில் உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெருமளவு நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா அளித்து வந்த ரூ.180 கோடி நிதியை ரத்து செய்து எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறையை வலுப்படுத்தும் அமைப்புகளுக்கு 486 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதில் இந்தியாவுக்கு வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.180 கோடி) நிதியை நிறுத்துவதாக மஸ்க் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி மூலம் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்பு இந்திய தேர்தலில் தலையிட்டதாக காங்கிரஸ் மீது பாஜ குற்றம்சாட்டியிருக்கிறது.
பாஜவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும், நாட்டின் நலன்களுக்கு எதிரான சக்திகள், இந்திய நிறுவனங்களுள் ஊடுருவுவதற்கு உதவியது தெளிவாகிறது. வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு ரூ.180 கோடி பெற்றது யார்? இது நிச்சயமாக இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அந்நிய தலையீடு. இதனால் யாருக்கு லாபம்? நிச்சயம் ஆளுங்கட்சிக்கு அல்ல’’ என கூறி உள்ளார்.
Read more : 5 வருடங்களுக்கு மேல் ஒரே மொபைல் நம்பரை யூஸ் பண்றீங்களா..? அப்ப கண்டிப்பா இதை படிங்க..!