பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்நிலையில் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019இன் படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து அன்றாடம் வழங்க வேண்டும். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்காத தனி நபர் மற்றும் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் கடந்த 7-ம் தேதி முதல் முதல் 20-ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களிடம் இருந்து இதுவரை மாநகடாட்சி சார்பில் 12,13,820 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 302 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.