ஆப்ரிக்க நாடான கென்யாவின் மகுவேனி பகுதியில் ராட்சத வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசியுள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, “திடீரென வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். புகை வருகிறதா என்று வானத்தைப் பார்த்தேன். ஆனால், ஒன்றுமில்லை. ஒரு பெரிய, உருண்டையான உலோகப் பொருள் வானத்தில் இருந்து விழுந்து, வறண்ட ஆற்றங்கரைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் இறங்கியது. அது மிகவும் சூடாக இருந்தது.
அது குளிர்ச்சியடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த ராட்சத வளையம் குளிர்ந்து சாம்பல் நிறமாக மாற சுமார் 2 மணி நேரம் ஆனது. ஆனால் மக்கள் அதைப் பார்க்க வருவதால் அது ஏற்கனவே பரபரப்புக்குரியதாக மாறிவிட்டது. கென்யா விண்வெளி நிறுவனம் அதைக் கேள்விப்பட்டு மறுநாள் வந்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தது. முக்குகு கிராமம் இதுபோன்ற நிகழ்வை இதற்கு முன்பு பார்த்ததில்லை. கென்ய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வுக் குழு அந்த பொருளை அகற்றிய போது, கிராம மக்கள் மத்தியில் அப்பொருள் என்னவாக இருக்கும் என்ற சலசலப்பு ஏற்பட்டது.
முதற்கட்ட ஆய்வில், அது ராக்கெட்டின் ஒரு பாகம் அது என்பது தெரியவந்தது. அத்தகைய பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது எரியும் வகையிலோ அல்லது மக்கள் வசிக்காத பெருங்கடலில் விழும் வகையிலோ வடிவமைக்கப்படும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரபரப்பை கிளப்பிய அப்பொருள் அங்கு விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அதன் தாக்கத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்ததாக முக்குகு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராட்சத வளையம் எங்கிருந்து வந்தது..?
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஏரியன் ராக்கெட்டின் மேல் அடுக்கில் இருந்த வளையமாக இருக்கலாம் என்று அந்த திட்டத்தின் இயக்குநரான மாட் ஆர்ச்சர் கூறியுள்ளார். செயற்கைக்கோள்கள் நன்றாக இயங்கி வரும் நிலையில், ராக்கெட்டின் பாகங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார். ஐரோப்பாவின் முக்கிய ராக்கெட்டாக ஏரியன் செயல்பட்டது. 2023ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதற்கு முன்பு வரை 230-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த ஏரியன் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.