மயிலாடுதுறை மாவட்டத்தை தொடர்ந்து கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது வடதமிழகம், தெற்கு ஆந்திரகடற்கரை பகுதிக்கு அப்பால் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கடலோரம், தென் தமிழகம்,மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை.
இந்த நிலையில் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதே போல கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.