திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்யா. திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் 25 வயதான ஹரிஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கும் திவ்யாவிர்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண விழா ஒன்றில் உணவு பரிமாறும் வேலைக்கு ஹரிஷ் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது, திவ்யா வயிற்று வலியால் அவதி உற்று வந்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் துடித்த திவ்யா ஒரு கட்டத்தில், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பலமுறை ஹரிஷுக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஹரிஷ் போனை எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த திவ்யா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிய ஹரிஷ் வீட்டை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் மனைவி கோபத்தில் உள்ளார் என நினைத்த ஹரிஷ், வீட்டின் வெளியே படுத்து உறங்கி உள்ளார்.
பின்னர் திவ்யாவின் மாமியார் செல்வி நீண்ட நேரம் ஆகியும் திவ்யா தூங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்து திரும்பவும் கதவை தட்டி உள்ளார். அப்போதும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது திவ்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிசை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.