மகாராஷ்டிரம் மாநிலத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கிரிக்கெட் பேட்டால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலையாளி கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் அமித் பகிடி(29). இவருக்கு திருமணமாகி பாவனா என்ற மனைவியும் 8 மற்றும் 6 வயதில் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அமித் மற்றும் பாவனா இருவரும் பிரிந்த நிலையில் அமித்தின் சகோதரர் விகாஸ் தனது அண்ணனின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அமித் அடிக்கடி பாவனாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று விகாஸ் பாவனாவின் வீட்டிற்கு சென்றபோது பாவனா மற்றும் குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் சடலமாக கடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விகாஸ் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் காவல்துறையின் சந்தேகம் அமித் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கிரிக்கெட் பேட்டால் கொடூரமாக அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. கணவனே தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.