விசாகப்பட்டினத்தில் மொழி தெரியாததால் வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி உதவி கேட்டு தெரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமுலு மற்றும் ஈது குரு. கணவன் மனைவியான இவர்கள் வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இங்கு வந்த இடத்தில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவியை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாததால் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனது மனைவியை விஜயநகரம் அழைத்துச் சென்றிருக்கிறார் சமுலு. கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் விஜயநகரம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராமாவரம் பாலம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது ஈது குருவுக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது உயிர் ஆட்டோவில் வைத்து பிரிந்தது. இதனால் பதறிய ஆட்டோ ஓட்டுநர் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்த மனைவியை கொண்டு செல்ல முயற்சி செய்தார் சமுலு. ஆனால் அவருக்கு தெலுங்கு தெரியாததால் அங்கிருந்த மக்களுடன் அவரால் பேச முடியவில்லை இதனால் செய்வதறியாது வழியின்றி நின்ற அவர் பின்னர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கி இருக்கிறார்.
பெண்ணை தோளில் ஒருவர் சுமந்து கொண்டு செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சமுலுவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்ட காவல்துறையினர் மருத்துவச் சான்றிதழ்களையும் வாங்கிப் பார்த்த பின்பு அவர் சொல்வது உண்மைதான் என உறுதி செய்தனர். மேலும் இது தொடர்பாக அவருக்கு ஆறுதல் கூறி அவரை அசுவாசப்படுத்தி உணவு வாங்கி கொடுத்து அவரது மனைவியின் சடலத்தை ஒடிசாவிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர்.