சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் முருங்கைக்காயை கொண்டு தாக்கிய வட மாநில இளைஞரை மாணவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் வட மாநிலத்தைச் சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள் தங்கிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் ரமேஷ் மண்டல் வயது 29. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது சக வட மாநிலத் தொழிலாளர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள காய்கறி கடைக்கு சென்று இருக்கிறார். காய்கறி வாங்கிக் கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பி இருக்கின்றனர். அப்போது தரமணி பகுதியைச் சார்ந்த கோகுல கிருஷ்ணன் என்ற 21 வயது மாணவன் உட்பட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஒன்பது மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தவறுதலாக ரமேஷ் மண்டலின் காலை மிதித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ரமேஷ் மண்டல் கையில் வைத்திருந்த முருங்கைக்காயை கொண்டு மாணவர்களில் ஒருவரை தாக்கி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அங்கிருந்த கட்டை மற்றும் கம்பி போன்ற பொருட்களைக் கொண்டு ரமேஷ் மண்டலை தலையிலும் உடலின் பிற பகுதிகளிலும் பலமாக தாக்கியிருக்கின்றனர். இதனால் சுயநினைவிழந்த ரமேஷ் மண்டல் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ரமேஷ் மண்டலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஹரிஹரன், கோகுலகிருஷ்ணன் உட்பட ஒன்பது மாணவர்களையும் கைது செய்தது போலீஸ். ரமேஷ் மண்டலை மாணவர்கள் கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியதால் அவனது மண்டை ஓடு உடைந்து மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ரமேஷ் மண்டல். இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.