அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கும் நிலையில், அனலை தணிக்க புயல் உருவாகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 8ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணைவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்தது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. கனமழையானது இன்றும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழகத்தில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் நேற்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது. அதேபோல, கடலூர், திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியசும். நீலகிரி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியசும், சென்னை, திருவள்ளூர், பகுதிகளில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது.
வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் உயரக்கூடும். இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 8ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அது வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.