சென்னை வேளச்சேரியில் இளைஞர் ஒருவர் காவல்துறை உதவியாளரை கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாலினி. இவரது சகோதரர் சதீஷ் தாஸ். ஷாலினி வேறொரு சமூகத்தைச் சார்ந்த வீரமணி என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி ஷாலினி மற்றும் சதீஷ் தாசிடையே மோதல் ஏற்படும். இருவரும் வாய் தகராறில் ஈடுபடுவார்கள். மேலும் ஷாலினியின் சகோதரர் சதீஷ் தாஸ் தனது தங்கை கணவரான வீரமணியை அடிக்கடி அவதூறாகவும் பேசி வந்திருக்கிறார். இதனால் தங்கை ஷாலினிக்கும் அண்ணன் சதீஷ் தாசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி தனது இரண்டு கிராம் மதிப்புள்ள தங்க நகையை காணவில்லை என வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஷாலினி. ஆனால் மறுநாளே தான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார் ஷாலினி. இந்நிலையில் நேற்று முன்தினம் ஷாலினியின் தாய் சாந்தி, அண்ணன் சதீஷ் தாஸ் மற்றும் அக்கா வேளாங்கண்ணி ஆகிய மூவரும் ஷாலினியின் வீட்டிற்கு வந்து அவரை சரமாறியாக தாக்கி சென்றுள்ளனர். இதனால் படுகாயமஅடைந்த அவர் சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொடூர தாக்குதல் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட வேளச்சேரி காவல் நிலைய உதவியாளர் அருண் இது தொடர்பாக விசாரிப்பதற்காக அன்று இரவே சதீஷ் தாசின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விசாரிக்க சென்ற காவல்துறை உதவி ஆய்வாளரை சதீஷ் சரமாறியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு தோள்பட்டையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் காவல்துறை உதவியாய்வாளர் அருண் அதை பொருட்படுத்தாமல் மக்களின் ஒத்துழைப்போடு சதீஷை பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஷாலினியின் தாயார் சாந்தி மற்றும் அவரது சகோதரி வேளாங்கண்ணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.