கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் சம்மதித்து திருமணம் செய்து வைத்தாலும் வெங்கடேசனின் உறவினரான செல்வம் என்பவர் சாதிய ரீதியாக கல்பனாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறார். கல்பனா எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அவரது ஜாதியை குறிவைத்து மனம் நோகும் படி பேசி வந்திருக்கிறார் செல்வம்.
தனது மனைவியை சாதிய ரீதியாக தொடர்ந்து தாக்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத வெங்கடேசன் செல்வத்துடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த கல்பனாவிற்கு சமுதாய நலக்கூடத்தில் வளைகாப்பு விழா நடத்தி இருக்கின்றனர். அந்த விழா முடிந்து கல்பனாவும் வெங்கடேசனும் தங்கள் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து தொந்தரவு செய்திருக்கிறார் செல்வம். தங்கள் ஜாதி குழந்தை கல்பனாவின் வயிற்றில் வளர்வது தீட்டு என்றும் அதனால் அந்த குழந்தையையும் கல்பனாவையும் கடப்பாரையால் கொல்லப் போகிறேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்பனா தனது கணவர் வெங்கடேசனை கூட்டிக்கொண்டு நேரடியாக காவல் நிலையம் சென்றுள்ளார். கர்ப்பிணிப் பெண் வளைகாப்பு முடிந்த கையோடு காவல் நிலையம் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவர்களிடம் விபரம் கேட்டுள்ளனர். அப்போது கல்பனா செல்வத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.