விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47) தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் குப்பைகள் க்ளீனிங் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.
சக்திவேல் நேற்று இரவில் மது அருந்துவதற்கு தாய் யசோதையிடம்(75) பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று அவர் சொல்லிய போது காதில் போட்டு இருக்கும் நகையை கழட்டி கொடு என்று கேட்டிருக்கிறார் . முடியாது என்று தாய் மறுத்துள்ளார். இந்த நிலையில் ஆத்திரமடைந்தவர் தாயிடம் சண்டை போட்டு சத்தம் போட்டுவிட்டு வெளியே சென்று விட்டு மது போதையில் இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார் .
இதனை தொடர்ந்து ஏன் பணம் கொடுக்கவில்லை என்று தாயிடம் சண்டை போட்டு, ஆத்திரத்தில் தாயை ஆவேசமாக தாக்கியுள்ளார். அதனால் தாய் மயங்கி கீழே விழுந்துள்ளார். அடித்ததில் தாய் இறந்து விட்டார் என்று நினைத்து வீட்டின் பின்புறமாகவே பள்ளம் தோண்டி தாயை உயிருடன் புதைத்துள்ளார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மது போதையில் இருந்த சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தாயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.