12 பயணிகளுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தில் மதியம் 12:10 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்கியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது..
எனினும் கராச்சியில் தரையிறங்கிய சிறிது நேரத்தில், 12 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. விமானம் ஏன் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது..
கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறங்கிய நிலையில், தற்போது 3-வது முறையாக இதே போன்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது..
முன்னதாக, ஸ்பைஸ்ஜெட்டின் டெல்லி-துபாய் விமானம் நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜூலை 5 அன்று கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல், ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் ஜூலை 17 அன்று கராச்சி ஜின்னாவின் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, பின்னர் விமானி தெரிவித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் கராச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..