மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியின்போது வன்முறை வெடித்தது. பல பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட ஆளுநர் அனுசுய உக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த கலவரம் தற்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள வடகிழக்கு எல்லை ரயில்வே, நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை எந்த ரயிலையும் இயக்க வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.