TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத்திட்டத்தின் 2023 ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
2023-24க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் நாளை (ஆகஸ்ட்-2) முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை https://www.naanmudhalvan.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நுழைவுச் சீட்டு வெளியீடப்படும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.