மலேசிய நாட்டில் பஃபர் மீனை சாப்பிட்ட மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கோமாநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவைச் சார்ந்த எண்பத்தி நான்கு வயது பெண் ஒருவரும் அவரது கணவரும் அருகில் உள்ள கடையிலிருந்து பஃபர் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர் சாப்பிட்ட சில நேரங்களில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். தற்போது கணவரும் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தெரிவித்த அந்த தம்பதியினரின் 51 வயது மகள் “எனது தந்தையும் தாயும் அந்த மீன் விஷமானது என அறிந்திருக்க வாய்ப்பில்லை அதன் காரணமாகவே அந்த மீனை வாங்கி அவர்கள் சமைத்துள்ளனர். தற்போது துரதிஷ்டவசமான ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது என கூறினார்.
மேலும் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்ட மருத்துவர் பஃபர் மீனில் டெட்ரோடோடாக்சின் மற்றும் சாக்சிடாக்சின் போன்ற கொடிய விஷத்தன்மை உள்ள மூலக்கூறுகள் இருக்கின்றன. இவை அதிக குளிரூட்டினாலோ அல்லது அதிக சூடாக்கினாளோ அழியாது. திறமையான சமையல் கலைஞர்களால் மட்டுமே இது போன்ற மீன்களை சமைக்க முடியும். அவர்களுக்கு மட்டுமே இதன் விஷத்தை எவ்வாறு அகற்றுவது என்று தெரியும் என கூறினார். பஃபர் மீன் அல்லது பலூன் மீன் என அழைக்கப்படும் இந்த மீன் நீரில் இருந்து வெளியே வந்தாலோ அல்லது தனக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டாலோ வெளிக்காற்றை உள்ளிழுத்து தனது உடலை ஒரு பலூன் போல பந்தாக மாற்றிக் கொள்ளும். முட்களை கொண்ட இதன் தோள் பகுதி நச்சுத்தன்மை கொண்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.