அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள குரோவெல் நகர் அருகில் பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த காற்றாலை மீது திடீரென்று மின்னல் தாக்கியதால், அந்த காற்றாலை தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதன் இறக்கையில் தீப்பிடித்ததை தொடர்ந்து, சுழன்று கரும்புகை பரவியது. இதனை நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று அவர்களது கேமிராவில் படம் பிடித்தனர்.
எனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 லட்சத்திற்கும் மேலானோர் இதனை பார்வையிட்டு வருகின்றனர். தீப்பிடித்த பிறகும், நிற்காமல் சுழன்று கொண்டிருந்ததால், ஓர் இறக்கையில் இருந்து மற்ற இறக்கைகளுக்கும் தீபரவியது. அதன்பிறகு கவனிக்கப்பட்டு, காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் குரோவெல் தீயணைப்பு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தீயணைப்பு துறையின் தலைவர் பெர்ரி ஷா கூறும்போது, இதுபோன்ற தீயை அணைக்கும் பணியை செய்வதற்கு எங்களிடம் போதிய வசதிகள் இல்லை என்று கூறியுள்ளார். எனவே, தீ தானாகவே அணைவதற்கு தீயணைப்பு வீரர்கள் விட்டு விட்டனர். இதுபோன்ற சமயங்களில் தீயை அணைக்க முயற்சிப்பது பாதுகாப்பானது அல்ல என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.