மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலங்களாகவே பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சக்திவேல் என்ற நபர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சக்திவேல் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல் துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சக்திவேல், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.