தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அப்போது அவர் கூறுகையில், ”ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் அதன் தேவைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ஆவின் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், கடந்த தீபாவளி பண்டிகையை விட நடப்பாண்டில் 25% ஆவின் இனிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், படிப்படியாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, ”அதிகாரிகளின் முனைப்பான பணிகளால் தான், பால் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியும். எனவே, அதிகாரிகள் அதற்கேற்றபடி பணியாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் தொடர்புடைய கால்நடை மருத்துவர்களின் விவரங்கள் எளிதாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.