9 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 8 ஆம் தேதி, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது.. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளோ அல்லது விமானமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், உலகின் மிகப்பெரிய விமானம் தொடர்பான மர்மங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு மாறியது.. MH370 விமானம் மாயமானதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.. ஆனால் அதே நேரத்தில் பல சதி கோட்பாட்டாளர்கள் விமானம் எப்படி காணாமல் போயிருக்கும் என்பது பற்றி பல்வேறு கோட்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்..
2014-ம் ஆண்டு மார்ச் 8, அன்று, மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மலேசியன் ஏர்லைன் விமானம் MH 370, சீனாவில் உள்ள பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.. ஆனால் திட்டமிட்டபடி அந்த விமானம் சீனாவில் தரையிறங்கவில்லை. விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் இப்போது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்த விமானம் மாயமானது தொடர்பாக சதி கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் கோட்பாடுகளை பார்க்கலாம்..
தீவிரவாத தாக்குதல் : MH370 விமானம் காணாமல் போன பிறகு விமானம் மற்றும் பயணிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பல கோட்பாட்டாளர்கள் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் நம்புகின்றனர். அந்த விமானம் பாகிஸ்தானின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டதாகவும் நம்பினர்.
ஏலியன் கடத்தல் : MH370 விமானத்தை ஏலியன்கள் கடத்தி இருக்கலாம் என்று ஒரு சிலர் தெரிவித்தனர்.. ஏலியன்கள் அந்த விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பூமியில் இருந்து மறைந்துவிட்டதாகவும் அவர்கள் கருதுகின்றனர்… விமானம் கடைசியாக கண்டறியப்பட்ட இடத்திலிருந்து வேற்றுகிரகவாசிகள் தொடர்பான உரைகளை குறியீடு மூலம் பெற்றதாக ஒரு நபர் கூறினார்.. எனினும் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை..
MH370 விமானி தற்கொலை : MH370 விமானியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்ளும் திட்டத்துடன் இருந்ததாகவும் பலர் கூறினர். எனவே அந்த விமானி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி, தானும் தற்கொலை செய்து பயணிகளையும் கொன்றதாக நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும் அவர் விமானத்தை விபத்துக்குள்ளாக்கியதாகக் கூறப்படும் விதத்தின் காரணமாக, விமான பாகங்கள் மற்றும் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.. ஆனால் மலேசிய விமானம் மாயமாகி 9 ஆண்டுகள் ஆகியும், அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது..