நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரம் குறித்த புதிய விதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. தற்போதுள்ள பேட்டரி பாதுகாப்பு தரத்தில் சில புதுப்பிப்புகளுடன் மின்சார வாகனங்களுக்கு இந்த விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஓலா, ஒகினாவா உள்ளிட்ட பிற நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பேட்டரி தீ விபத்து குறித்து விசாரிக்க அரசு சிறப்புக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மின்சார இரு சக்கர வாகனங்கள், குவாட்ரிசைக்கிள்கள் மற்றும் கார்களுக்கான AIS 156 பாதுகாப்புத் தரத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க் ‘ஸ்டேடிக்’ நிறுவனத்தின் CEO அக்ஷித் பன்சால் இதுகுறித்து பேசிய போது “அரசாங்கத்தின் எலக்ட்ரிக் பேட்டரி விதிமுறைகளை நாங்கள் வரவேற்கிறோம். இது சரியான நடவடிக்கையாகும்.. இது மின்சார இயக்கம் சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய அரசாங்கத்தின் தெளிவான நோக்கத்தைக் காட்டுகிறது. நடைமுறையில் இது நம்பகமான தயாரிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும் உற்பத்தியாளர்களுக்கான வழிகாட்டியாகும்.. மறுபுறம் இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது EV தொழில்துறைக்கு உத்வேகத்தை அளிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு தொழில்துறையை சிறப்பாக செயல்பட தயார்படுத்தும்..” என்று தெரிவித்தார்..
புதிய விதிகள் அமலுக்கு வருவதால் பேட்டரி செல்கள், பேக்குகள், பிஎம்எஸ் போன்றவற்றின் தரம் உயரும். இது மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு நுகர்வோரின் நம்பிக்கையை பெற உதவும். இதனால் இந்த பாதுகாப்பு விதிகள் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதார இழப்பையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது..