தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையை உத்தரவுபடி, டாஸ்மாக் மற்றும் தனியார் பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டவிரோதமான மதுபாட்டில் விற்பனை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் மதுபானங்கள் பதுக்கலை தடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
அதனை ஏற்று, சிசிடிவி கேமராவை பொருத்தவும், அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்பவும் உத்தரவிட்ட டாஸ்மாக் நிர்வாகம், சிசிடிவி பொருத்தாவிட்டால், மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.