நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறுவது ஒரு பக்கமும், சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இணையும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு சில கட்சிக்கும் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இணையும் செய்தி அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இதற்கிடையே, 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் கட்சி பணியாற்றி வரும் நடிகை கவுதமி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த கஸ்தூரி, சமீபத்தில் பாஜகவில் இணைய போகிறார் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், அண்ணாமலை தலைமையில் நடந்த காக்கிச்சட்டை பேரணியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். கௌதமி, காயத்ரி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தற்போது கஸ்தூரி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.