கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யவும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தி வைக்கவும் சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சீனாவில் தற்போது பிஎஃப் 7 (Omicron BF.7) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா 4ஆவது அலை ஏற்பட்டால் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளிலுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு (Work From Home) மாற்ற ஆலோசித்து வருகின்றன. அதுபோலவே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியும் மந்தமடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பணிக்கு ஆட்கள் எடுக்கும் ஸ்டாலின் சாஸ் நிறுவனத்தின் பங்குதாரர் மாலா சவ்லா கூறுகையில், “கொரோனா குறித்த தகவல்கள் மீண்டும் அதிகரித்து வருவதால் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணிகளை நிறுவனங்கள் குறைத்துள்ளன. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். என்றாலும் உற்பத்தி மற்றும் நுகர்வோர் துறையினர் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர்” என்றார். என்றாலும் கூட இந்தியாவில் கொரோனா தடுப்பு செலுத்தியதால் மக்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கொரோனா பரவல் பெரிய அளவில் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.