தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில் இந்த கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அயோத்தி ராமர் நிகழ்ச்சி கோவில்களில் சிறப்பு ஒளிபரப்பு செய்யக்கூடாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியது.
தமிழக அரசு விளக்கம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்குஅவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெஉள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும்கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது தமிழக அரசு.
அண்ணாமலை ஆடியோ
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலில், அயோத்தி ஸ்ரீராமரின் பிராண பிரதிஷ்டை தொடர்பான எந்த நடவடிக்கையையும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருப்பது, தற்போது வேகமாக பரவி வருகிறது.