அதிமுக பைல்ஸை எப்போது வெளியிடுவீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை, நீங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் ஏன் அதை செய்யவில்லை என்று மலுப்பிவிட்டு பதிலளிக்காமல் சென்றது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைப்பயண நிகழ்வுக்காக கும்பகோணம் சென்றபோது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் வகிக்க கூடிய பொறுப்புக்கும், வார்த்தைக்கும் சம்மதம் இல்லை. கே.பி. முனுசாமிக்கு அண்ணாமலை மீது தான் வன்மம். அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தது போல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்தது போல், பாஜவிற்கு ஒரே ஒரு மோடி தான். அண்ணாமலையை போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மோடியை போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அதை கே.பி.முனுசாமி புரிந்து கொண்டு பேச வேண்டும். என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் உள்ளது. பாஜக மீது கோபம் இருக்கிறது என்பதை விட அண்ணாமலை மீது தனிப்பட்ட வன்மம் இருக்கிறது என்று கூறினார்.
அப்போது அதிமுக பைல்ஸை எப்போது வெளியிடுவீர்கள் என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை, நீங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் ஏன் அதை செய்யவில்லை’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னதாக சென்னை தாம்பரத்தில் அண்ணாமலை கூறுகையில், ‘அண்ணாமலையையும், பாஜவையும் பற்றி பேசினால் பிரபலமாகிவிடலாம் என சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் இல்லாத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி நாங்கள் பேசி அவர்களது மார்க்கெட்டை ஏற்ற விரும்பவில்லை. என் வீட்டில் நான் விளக்கு ஏற்றுகின்றேன் அவர் வீட்டில் அவர் விளக்கு ஏற்றவில்லை என்றால் அது அவருடைய பிரச்னை. இயக்குநர் ரஞ்சித் கனவில் வந்த கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.