ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வேலூர், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் முதல்வராக இருக்கும் சீனிவாசன் என்பவர் வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ”அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி, கல்லூரி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதாவது காலை 9 மணிக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் ராதிகா, சாந்தி உள்பட 20 மகளிரணி நிர்வாகிகள் மற்றும் 2 ஆண்கள் ஆகியோர் எந்த அனுமதியும் பெறாமல் கல்லூரிக்குள் புகுந்தனர். மேலும், கல்லூரிக்கு பின்புறம் உள்ள பயன்படுத்தப்படாமல் உள்ள கழிவறையை திறந்து சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், “புல்லா ஏகப்பட்ட அழுக்கு இருக்குமா. வருசக்கணக்காக சுத்தம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு எவ்வளவு தொற்று பாதிப்பு வரும் தெரியுமா? இந்த மாதிரி சுத்தம் செய்யாமல் இருந்தால் தாய்மையே போய்விடும். ஒரு அரசு கல்லூரியை இவ்வளவு மட்டமாகவா வைத்திருப்பார்கள்” என்று அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கின்றனர். ஆனால், அந்த வீடியோவில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான கருத்துக்களை திணித்து வதந்தி பரப்பியுள்ளனர். அவர்கள் சுத்தம் செய்த கழிவறை கல்லூரி மாணவிகள் பயன்பாட்டிலேயே இல்லை. கழிவறை குறித்து மாணவிகள் யாரும் குற்றம்சாட்டவில்லை. அவர்கள் அத்துமீறி உள்ளே வந்து வதந்தி பரப்பியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறினார்.
இந்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் ராதிகா, சாந்தி உள்பட 20 மகளிரணி நிர்வாகிகள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 447 ஆகிய இரு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், கழிவறையை கழுவிய அதிமுக மகளிர் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.