ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாகவிருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப துணை வேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவை சேர்ந்த உறுப்பினர்களை தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார்.
பின்னர், தன்னிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். கடந்த 2023 நவம்பர் மாதம் 13ஆம் தேதி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இதையடுத்து, இந்த மசோதாக்களை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. பின்னர், 2023 நவம்பர் 28ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பினார்.
இதையடுத்து நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “தமிழக சட்டசபையில் நிறைவேறிய மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் உத்தரவிட்டது. சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் தான், ஆளுநருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பினை தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.