தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மகளிரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்தில் 98 வார்டுகளிலும் (703 ரேஷன் கடைகள்), இரண்டாம் கட்டத்தில் 102 வார்டுகளிலும் (725 ரேஷன் கடைகள்) விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “தன்னார்வளர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதவி மையமும் அனைத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றால் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டல் வாரியாக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிர்வாக ரீதியாக சில பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30ஆம் தேதி) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அன்று மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.