இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கவுரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் நீதிமைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தலைமைச்செயலத்திற்கு வருகை தந்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த அனைத்து கட்சியினரையும் திமுக அமைச்சர்கள் இருகரம் கூப்பி வரவேற்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்க உள்ளது. அனைத்து கட்சிகளின் நிலைபாடும் இந்த கூட்டத்தின் மூலம் தெரியவரும்.
Read more:தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. குமுறும் நகைப்பிரியர்கள்..! இன்றைய நிலவரம் என்ன..?