ரசிகை மற்றும் 8 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஐதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார். வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த எட்டு வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்தான்.. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தெலுங்கான சட்டமன்றத்தில் எதிரொலித்தது. அன்றைய தினம் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டும் வகையில் முதல்வர் பேசி இருந்தார். முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களுடன் பேசிய அல்லு அர்ஜுன், “என்னுடைய புகழ், நற்பெயர் ஆகிய இவற்றை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டினார். புஷ்பா 2 திரைப்பட ப்ரீமியர் ஷோவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தாய் மகன் உயிரிழந்தது துருதிஷ்டவசமானது, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கூறினார்.
இந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர், திடீரென்று அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த ரேவதி குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்ட காரர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.